Monday, July 14, 2014

தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்ற ஆயுதம்! ஒரு வரலாற்று பார்வை!!

இந்திய அளவில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக உருவானதே தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005. இதற்கான விதைகள் - 1987 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள தேவ்துங்கிரி என்ற சிறு கிராமத்தில் தூவப்பட்டன. அவ்வாண்டில் தான் - மனிதஉரிமை ஆர்வலர்கள் நிக்கில் தே, அஞ்சி, ஷங்கர் சிங் மற்றும் அருணா ராய் ஆகியோர் இக்கிராமத்தில், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கான ஓர் அமைப்பை உருவாக்க முடிவுசெய்தனர். 

துவக்கமாக - அரசு திட்டங்களில் பணிபுரியும் எளிய மக்கள் எவ்வாறு சம்பளம் வழங்குவதில் ஏமாற்றப்படுகின்றனர், நியாய விலை கடைகளில் எவ்வாறு முறையாக விநியோகங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற விபரங்களை அவர்கள் கண்டறிந்தனர். கிராம மக்களோடு தங்கி அவர்கள் புரிந்த மூன்றாண்டு சேவையின் விளைவாக மஸ்தூர் கிசான் சக்தி சங்கட்டன் என்ற அமைப்பு 1990 ஆம் ஆண்டு உருவாகியது.

இந்த அமைப்பு முறையாக செயல்பட - அரசிடம் இருந்து பல தகவல்கள் பெறுவது அவசியமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அரசிடம் தகவல் பெற இவ்வமைப்பு முயற்சி செய்யும்போது, ஆங்கிலேய காலத்து அதிகார ரகசியங்கள் சட்டம், 1923 (Official Secrets Act, 1923) - இவர்களுக்கு பதிலாக வழங்கப்பட்டு, தகவல்கள் மறுக்கப்பட்டன. பெரும் போராட்டத்திற்கு இடையில் சில தகவல்களை இவ்வமைப்பு வெற்றிகரமாக பெறவும் செய்தது. அரசு திட்டம் மூலம் இல்லாத நிறுவனம் ஒன்றிற்கு 36 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது போன்ற தகவலை இவ்வமைப்பு வெளிக்கொண்டுவந்தது.

இது போல் பல முறைக்கேடுகள் வெளிவரவே, எவ்வித தடையும் இன்றி அரசு துறையினால் தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவ்வமைப்பு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவர் என்ற ஊரில் ஏப்ரல் 5, 1996 அன்று போராட்டத்தை நடத்தியது. 40 நாட்கள் நடந்த இப்போராட்டம் - தகவல் பெறும் உரிமைச் சட்டம் கோரும் இயக்கத்திற்கு ஒரு முன்னோடி என்றே சொல்லவேண்டும்.

இந்திய ஊடகங்கள் அவை (Press Council of India) - 1996 ஆம் ஆண்டு வடிவமைத்த முன்மாதிரி கொண்டு சில மாநிலங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டங்களை - தத்தம் மாநிலங்களில் - கொண்டு வந்தனர். இந்தியாவில் - குடிமக்களுக்கு, தகவல் பெறும் உரிமை வழங்கி சட்டம் கொண்டுவந்த முதல் மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்களில் - பல குறைப்பாடுகள் இருந்தன. இது போன்ற சட்டம் - தேசிய அளவில் வகுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

தேசிய அளவில் இது குறித்து போராடிய அமைப்புகளில் - National Campaign for People’s Right to Information (NCPRI) போன்றவை முக்கியமானவை. 2002 ஆம் ஆண்டு Freedom of Information Act 2002 என்ற சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் திருப்தியானதாக இல்லை என்று எதிர்ப்புகள் கிளம்பவே, இந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. 

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக, இந்திய பாராளுமன்றம், ஜூன் 15, 2005 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்ற புதிய சட்டத்தினை நிறைவேற்றியது. இச்சட்டத்திற்கு - இந்திய ஜனாதிபதி, ஜூன் 22, 2005 ஒப்புதல் வழங்க - அக்டோபர் 12, 2005 அன்று - இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.

No comments:

Post a Comment