Monday, July 14, 2014

70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்!




சென்னை நகர மக்களின், குடிநீர் தேவைக்காக, முதன் முதலில் கட்டப்பட்டது, பூண்டி நீர்தேக்கம். இது, அப்போது, 65 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டது. ஜூன் 2014ல், 70வது ஆண்டை நிறைவு செய்கிறது.பூண்டியில் நீர்தேக்கம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, 1900ம் ஆண்டே எழுந்தாலும், அது, செயலாக்கம் பெற்றது, தீரர் சத்தியமூர்த்தி முயற்சியால் தான்.கடந்த, 1939ல் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவியது. போதிய பருவ மழை இல்லாமல், நிலத்தடி நீர் குறைந்து, மக்கள் தண்ணீருக்கு தவியாய் தவித்தனர். 

மக்களின் துயரைப் போக்க, அப்போதைய, சென்னை மேயர் சத்தியமூர்த்தி, சென்னையில் இருந்து, 60 கி.மீ., தூரத்தில், கொற்றலை ஆற்றின் நடுவில், பூண்டி எனும் இடத்தில், நீர்தேக்கம் அமைக்க திட்ட அறிக்கை தயாரித்தார். ஆனால், அந்த திட்ட அறிக்கைக்கு, எளிதில் அனுமதி கொடுக்கவில்லை ஆங்கிலேயே அரசு. இருப்பினும், ஆங்கிலேய அரசிடம் போராடி, ஒப்புதல் பெற்றார் சத்தியமூர்த்தி.



பூண்டி நீர்தேக்கத்தை கட்ட, 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு, ஆக.,4, 1944ல் மேயர் சத்தியமூர்த்தி தலைமையில், சென்னை மாகாண கவர்னர், சர் ஆர்தர் ஹோப், அடிக்கல் நாட்டினார். நான்கு ஆண்டுகளில், நீர்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 14, 1944ல், அணை திறந்து வைக்கப்பட்டது.

நீர் தேக்கம் அமைய பாடுபட்ட சத்தியமூர்த்தி, அப்போது உயிருடன் இல்லை; அவர், 1943ம் ஆண்டே இறந்து விட்டார். நீர்தேக்கம் திறக்கப்பட்டதும், அதற்கு சத்தியமூர்த்தி பெயர் வைக்குமாறு காங்கிரஸ் பிரமுகர்கள், ஆங்கிலேய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இது, காமராஜரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், சென்னை மாநகராட்சி கூட்டத்தில், 1948ல் தீர்மானம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். பின், சென்னை மாகாண முதல்வராக ஆன பின், 1954ல் நீர்தேக்கத்திற்கு, சத்தியமூர்த்தி நீர்தேக்கம் என, பெயர் சூட்டினார். இந்த பெயருடன், அழகிய கிரானைட் ஸ்தூபி, பூண்டி நீர்தேக்க கரையில் உள்ளது.

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக முதலில் கட்டப்பட்டது, இந்த நீர்தேக்கம் தான். அதன் பின் தான், புழல், சோழவரம் ஏரிகள், சென்னையின் குடிநீர் தேவைக்காக மாற்றப்பட்டன. இங்கு பூங்கா, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டும், பராமரிப்பில்லாததால், சேதமடைந்து உள்ளன. தமிழக அரசு இதை பராமரித்து, சீரமைத்தால், சிறந்த சுற்றுலா தலமாக திகழும் என்பதில், ஐயமில்லை.

பூண்டி நீர்தேக்கம் சில தகவல்கள்...

* பூண்டி நீர்தேக்கம், கொற்றலை ஆற்றின் நடுவில் அமைக்கப் பட்டுள்ளது. இதற்காக, இங்கிருந்த, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள், அகற்றப்பட்டன. மேலும், நீர்தேக்கத்திற்கு நடுவில் இருந்த, வரலாற்று சிறப்பு மிக்க, ஊன்றீஸ்வரர் கோவிலும் அகற்றப்பட்டு, கரையோரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அணையில் தண்ணீர் வற்றும் போது, இன்றும், பழைய கோவிலை காணலாம்.

* அணையின் மொத்த கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி; பரப்பளவு, 121 ச.கி.மீட்டர்.

* அணையில் நீர் நிறைந்தால், உபரி நீர் வெளியேற, 16 மதகுகள் உள்ளன. அணை கட்டியதில் இருந்து, இரண்டு அல்லது மூன்று முறை தான், உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

* மழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், அணை நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் என, இரண்டு கால்வாய்கள் மூலம், சோழவரம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

* பூண்டி நீர்தேக்கத்தை பராமரிக்க, பொதுப்பணித் துறை அலுவலகம், அருகிலேயே உள்ளது. உயர் அதிகாரிகள் தங்குவதற்காக, இங்கு, விருந்தினர் மாளிகை உள்ளது. வெளியிடங்களில் தங்குவதை விரும்பாத ஈ.வெ.ரா., இங்குள்ள விருந்தினர் அறையில் தங்கிச் சென்றுள்ளார்.

* பூண்டியில், தொல்பழங்கால வைப்பகம் உள்ளது. இங்கு, ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய கற்களால் ஆன ஆயுதங்கள் மற்றும் முதுமக்கள் தாழியும் உள்ளது. 

No comments:

Post a Comment