பழங்கால ஆங்கிலம் (400 -1100)
கிபி 5 ம் நூற்றாண்டளவில் பிரட்டனை மூன்று ஜெர்மன் குழுக்கள் (ஆங்கில்சு, சாக்சன், யூட்) இன்றைய ஜெர்மன் / டென்மார்க் நிலப்பரப்பில் இருந்து ஆக்கிரமித்தன. இந்தக் குழுக்கள் தம்மிடையே புரிந்துக்கொள்ளக்கூடிய ஒத்த மொழிகளைப் பேசின. அப்போது அங்கு பேசப்பட்டு வந்த கெல்டிக் மொழிக் குழுக்கள் வடக்கேயும் மேற்கேயும் தள்ளப்பட்டன. “ஆங்கிலோ இனத்தவர்கள் “ஆங்லோ-லாந்து” எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி “இங்கிலிசுக்” எனும் ஜெர்மன்மனிய மொழிக் குடும்பத்து மொழியாகும்.
இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து – இங்கிலிசு என்றானது.”இக்காலத்திப் பேசப்பட்ட ஆங்கிலம் பழம் ஆங்கிலம் எனப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. தற்கால ஆங்கிலத்தின் பெரிதும் புழங்கும் 50 விழுக்காடு சொற்களுக்கு பழ ஆங்கில வேர்கள் உண்டு.
இடைக்கால ஆங்கிலம் (1100 – 1500)
பிரான்சின் நோர்மண்டி சிற்றரசின் மன்னன் வில்லியம் இங்கிலாந்தை 1066 கைப்பெற்றினான். இந்த புதிய ஆக்கிரமிப்பாளர்கள் நோர்மன் எனப்பட்டனர். இவர்கள் ஒரு வகை பிரான்சிய மொழியைப் பேசினர். அரச அவையிலும், வணிகத்திலும் பிரான்சிய மொழியே செல்வாக்கு பெற்றது. ஆட்சித் தொடர்புடைய உயர் பிரிவு மக்கள் பிரான்சிய மொழியையும், பொது மக்கள் அல்லது கீழ்ப் பிரிவு மக்கள் ஆங்கிலத்தையும் பேசினர். இக்காலத்தில் பல பிரான்சிய சொற்கள் ஆங்கிலத்துடன் கலந்தன. இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கியம் ‘த கான்ட்டர்பர்ரி கதைகள் ‘(The Canterbury Tales) ஆகும்.
நோர்மன் ஆக்கிரமிப்புக்கு பின்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் அரச ஆவணம் ‘ப்ரோவிஷன்ஸ் ஆஃப் ஆக்சுபோர்டு’ (1258) (Provisions of Oxford ) ஆகும். 1362 ஆம் ஆண்டு எட்வர்ட்-3 என்னும் அரசன் முதன் முதலில் ஆங்கிலத்தில் நாடுளுமன்றத்தில் பேசினான். ஆங்கிலத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும்.
முன் தற்கால ஆங்கிலம் (1500 – 1800)
15 நூற்றாண்டின் இறுதியில் பெரும் உயிரெழுத்து மாற்றம் நிகழ்ந்தது. முதல் ஆங்கில அகராதி 1604 ஆண்டில் வெளியிடப்பட்டது. இக்காலப்பகுதிக்கு சற்று முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அச்சுத்தொழில்நுட்பத்தால் (1476) பல்வேறு நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவர தொடங்கின. பெரும்பான்மையான பதிப்பகங்கள் இருந்த இலண்டனின் வட்டார வழக்கு, தரப்படுத்தப்பட்ட ஆங்கிலமாக மருவியது. இக்காலத்தில் வாழ்ந்த ஷேக்ஸ்பியர் (1564-1616) ஆங்கிலத்தின் 30 மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். இவை ஆங்கிலத்தின் உயர்ந்த இலக்கியமாக இன்றுவரை கருதப்படுகிறது. 1702 முதல் ஆங்கில நாளிதழ் ‘த டெய்லி கூரான் ‘(The Daily Courant) இலண்டனில் வெளியிடப்பட்டது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் 1768 – 1771 முதலில் வெளியிடப்பட்டது.
தற்கால ஆங்கிலம் (1800 – 2010)
1800களில் தொழிற்புரட்சி இடம்பெற்றது. பிரிட்டன் உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாறியது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. 1922 பிபிசி ஒலிபரப்புச்சேவை தொடங்கி, ஆங்கிலத்தை பொதுமக்களிடம் எடுத்துசெல்ல உதவியது.
மேலும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது.
வானொலி, தொலைகாட்சி, இயங்குபடம், வரைகதை, இணையம் என பல்வேறு ஊடக தொழில்நுட்பங்கள் ஆங்கில உலகிலேயே முதலில் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றின் ஊடாக ஆங்கிலம் தன்னை மேலும் வேரூன்றிக் கொண்டது. எ.கா இணையம் இயங்கும் பல்வேறு நெறிமுறைகள் (Protocols), வலைத்தளங்கள் கட்டமைக்கப்படும் குறியீட்டு மொழிகள் (markup languagues), நிரல் மொழிகள் ஆகியவை ஆங்கிலத்திலேயே உள்ளன.
வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மொழிகள் அறிவியலின் மொழியாக இருந்து வந்துள்ளன. தொடக்கத்தில் இலத்தின், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளும் பின்னர் ஆங்கிலமும் ரஷிய மொழியும் அறிவியல் மொழிகளாக இருந்தன. இன்று ஆங்கிலமே தனிப் பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது. உலக அரசியலும், வணிகமும் இன்று பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகிறது.
No comments:
Post a Comment