Friday, October 3, 2014

உலக அளவில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ உருவானது எப்படி?

உலக அளவில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ உருவானது எப்படி?



mothers-dayபல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ‘அன்னையர் தினம்’ உலகெங்கும் கொண்டாட காரணமாக இருந்ததன் பின்னணி என்ன? என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
பழங்காலத்தில் கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினார்கள். ரோமர்களும் ‘சைபெலி’ என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்த கொண்டாட்டம் ‘மாதா’ திருக்கோவிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது நவீன காலத்தில் ‘மதர்ஸ் டே’ கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி வித்தியாசமானது.
இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடும் ‘அன்னையர் தினம்’ அமெரிக்காவில் தான் உருவானது.
அனா ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் ‘கிராப்டன்’ என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது அங்கு நடந்த யுத்தக் களத்தில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபுறமும் சிதறிப் போனது. அப்படி பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், சமாதானத்துக்கும் கடுமையாக போராடியவர் தான் அனா ஜார்விஸ். இறுதியில் அவருடைய பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904-ம் ஆண்டில் மறைந்தார்.
அந்த பார்வையற்ற மகள் அன் ரீவ்ஸ் ஜார்விஸ் முதன்முதலாக தன் தாயின் நினைவாக உள்ளூரில் உள்ள ‘மெத்தடிஸ்ட் சர்ச்’சில் 1908-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று ‘சிறப்பு வழிபாடு’ ஒன்றை நடத்தினார். தன் தாயாரின் நினைவை போற்றியதைப் போலவே, எல்லோரும் அவரவர் அன்னையை கௌரவிக்க வேண்டும், எல்லோருடைய இல்லங்களிலும் அன்றைய தினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.
இந்நிலையில, 1913-ம் ஆண்டு தன் வேலை நிமித்தம் காரணமாக பார்வையற்ற அன் ரீவ்ஸ் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியாவில் குடியேறினார். அவருடைய தாயார் விட்டுச் சென்ற சமூக சேவையை ஒரு கடமையாகவே எண்ணி அதை தொடர்ந்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அமைப்பில் தன்னை இணைத்து கொண்டார்.
அதன் பிறகு, நீண்ட நாட்களாக தன் மனதில் உறுத்தி வந்த எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்கு தெரிவிக்க அரசாங்கமும் அவருடைய கருத்தை ஏற்று 1913-ம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்து அறிவித்தது.
அதன் பிறகும், ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் ‘அன்னையர் தினம்’ கொண்டாடப்பட வேண்டும், அந்த நாளை அரசின் ‘விடுமுறை’ நாளாக அறிவிக்க வேண்டுமென அப்போது அமெரிக்க அதிபராக இருந்த உட்ரோ வில்சனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வ அன்னையர் தினமாக அறிவித்தார்.
அமெரிக்காவை அடுத்து கனடா அரசும் இதனை அங்கீகரித்தது. அதுமட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் இருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளை ‘அன்னையர் தினம்’ என அறிவித்து நடைமுறைப்படுத்தியது.
ஆனால், அங்கு அன்னையர் தின கொண்டாட்டங்கள் வணிகமயமாக மாறியது. எதையும் வியாபாரமாக்கி பணம் சேகரிக்கும் அமைப்பு அன்னையர் தினத்தன்று அன்னையின் படம் பொறித்த கொடியை விற்று பணம் சேர்த்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜார்விஸ். 1923-ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.  ”அன்னையர் தினம் உணர்ச்சிபூர்வமான நாளாகவே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். பணம் சேர்க்கின்ற நாளாக இருக்கக் கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று வாதாடி வென்றார்.
தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் அவர் இறப்பதற்கு முன்னதாக,  ”உலகம் முழுவதும் அன்னையர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பது தான் என் ஆசை” என்று தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டு இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.
அவருடைய ஆசை பூர்த்தியாகும் விதமாக இன்று உலகம் முழுவதும் மதர்ஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (11 ஆம் தேதி) இந்தியாவில் அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment